Saturday, October 4, 2014

சட்டென்று மாறுது வானிலை



நேரம் காலை 6:45
பொழுது ஓரளவு விடிந்திருந்தது. குளிர் காலம் தொடங்குவதற்கான அறிகுறி தென்படத் துவங்கியிருந்த அக்டோபர் மாதம். நைட் ஷிப்ட் முடிந்து பஞ்ச்சிங் கேட்டில் பஞ்ச் அடித்து வெளியே வந்தேன். கம்பெனி வாகனம் எதுவும் தென்படவில்லை. 15 நிமிடம் தாமதமாக வந்ததால் டவுன்ஷிப் செல்லும் பஸ் சென்றிருந்தது. எனக்கு பிரச்சினை ஒன்றும் இல்லை. பெரும்பாலோர் தங்கியிருக்கும் டவுன்ஷிப்பிற்கும் கம்பெனிக்கும் தூரம் அதிகம். தற்போது நான் தங்கியிருக்கும் பூர்வா பேச்சிலர் பில்டிங் இங்கிருந்து 1.5 கிலோ மீட்டர் தான். அப்படியே பொடி நடையாக சென்று விடலாம். போன வருடம் வண்டி வாங்கி கொஞ்ச நாளில் மழை சீசனில் வழுக்கி விழுந்து அது ரிப்பேர் ஆகிவிட்டது. நல்ல ரீ சேல்ஸ் ஆஃபர் வந்ததும் வண்டியை விற்றாயிற்று. 

நான் வேலை செய்யும் பொல்யூஷன் நிரம்பிய காப்பர் இண்டஸ்ட்ரிக்கு செகண்ட் ஹேண்ட் வண்டிதான் சிறந்தது என்ற ஞானோதயம் ரொம்ப தாமதமாகத்தான் வந்தது.அடுத்த அப்ரைசலில் நல்ல ஹைக் கிடைத்தால் செகண்ட் ஹேண்ட் வண்டி வாங்க வேண்டுமென்று நினைத்துக்கொண்டே மெதுவாக நடக்கத் துவங்கினேன். வழியில் என்னைப்போலவே லேட்டாக வீடு திரும்பவர்கள் எவரேனும் லிஃப்ட் கொடுப்பார்கள். யாரும் லிஃப்ட் தரவில்லை என்றாலும் பிரச்சினை இல்லை. மொபைலை நோண்டிக்கொண்டே நடந்தால் நேரம் சென்றுவிடும். மயில்கள் நிரம்பிய வனப்பகுதி  வழியில் இருப்பதால் அவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டும் சென்றுவிடலாம். காலை கொஞ்சம் எட்டி வைத்து, கையை வீசி  நடந்தால் வாக்கிங் செல்வது போன்ற தோரணை வந்துவிடும்.

மெல்ல நடந்து அவுட் கேட் வந்துவிட்டேன்.  என்னுடைய பேச்சிலர் ஹாஸ்டல் அவுட் கேட்டிற்கு ஒட்டியது போல் அமைந்திருக்கும். நேராக ரூமிற்கு செல்லலாமா இல்லை டீ குடித்து விட்டு செல்லலாமா என்று யோசித்து நடந்துகொண்டு இருந்தேன். டீக்கடைக்கு சென்றால் ஒரு பிரச்சினை. கை தானாகச் சென்று சிகரெட் பற்ற வைக்கும். காலையில் ரிப்போர்ட்டிங் செய்யும்போது பாஸ்ஸிடம் திட்டுவாங்கியது வேறு நியாபகத்திற்கு வர, நிக்கோட்டின் வாசனை மெல்ல மெல்ல மூளையில் பரவத்துவங்கியது. ப்ளாண்ட்டில் அடிக்கடி சல்ஃபர்-டை-ஆக்ஸைடு கேஸ் லீக்கேஜ் ஆகும். அதுவே நம்மை ஒன்றும் செய்யவில்லை. இந்த நிக்கோட்டின் என்ன செய்துவிடும் என்று சுயசமாதானத்தின் பேரில் கால்கள் அவுட்கேட்டை கடந்து டீக்கடைக்கு சென்றது. வழக்கமாக  அவுட்கேட்டை பயன்படுத்துவதால் எல்லா  செக்யூரிட்டியும் நல்ல பழக்கம். ஒரு சினேகப்புன்னகையை வீசிவிட்டு கடையை அடைந்தேன்.

‘’மவுசி ஏக் சாய் அப்பிதே’’ என்று கடைக்கார பெண்ணிடம் சொல்லிவிட்டு ஒரு டிஜாரம்ப்ளாக் சிகார் எடுத்து பற்ற வைத்தேன். 4,5 பேர் டீக் குடித்துக் கொண்டு காலையிலேயே ஷேர் மார்க்கெட் , மோடி என்று விவாதத்தில் ஈடுபட்டு இருந்தனர், குஜராத்திகளுக்கு பணம் தான் பிரதானம்,அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிரம்ப இருந்தாலும், கற்றுக்கொள்ளக்கூடாத சில விஷயங்களும் இருந்தன.

சிகரெட் புகையை நன்றாக இழுத்து நுரையீரலை நிரப்பி, பிறகு வாய் மூக்கு வழியாக வெளியேற்றினேன். அப்போது ஆதித்யா பிர்லா பப்ளிக் ஸ்கூல் என்று எழுதியிருந்த மஞ்சள் நிற பள்ளிப்பேருந்து வந்து ரோட்டின் பக்கவாட்டில் நின்றது. கம்பெனியின் டவுன்ஷிப்பிலிருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு தினமும் இந்த நேரத்திற்கு அவுட் கேட்டை கடக்கும். பஸ் டிரைவர்கள் மாவா வாங்க, டீ குடிக்க என்று  5 நிமிடம் பஸ்ஸை இங்கே நிறுத்துவார்கள். அதிக நேரம் நிறுத்தினால் கம்பெனி நிர்வாகத்திற்கு கம்ப்ளெயிண்ட் சென்று விடும் என்பதால் ஓட்டமும் நடையுமாக பெட்டிக்கடையை அடைந்தனர்.
மாவா வாங்கி, அதைப்பிரித்து பாக்குடன் சுண்ணாம்பு கலந்து நன்றாக தேய்த்து மசாலா நன்றாக தோய்ந்தவுடன் அதை ரப்பர் முடிந்து பாக்கெட்டில் போட்டுக்கொண்டனர். சிலர் டீ , சிகரெட் குடித்தனர்.

ஏதோ சிந்தனையில் இருந்தபடி நான் டீயை உறிஞ்சியபடியே  பஸ்ஸை நோட்டம் விட்டேன். பஸ்ஸின் நிறைய ஜன்னல்கள் அடைத்திருந்தாலும், ஒன்றிரண்டு ஜன்னல்கள் திறந்திருந்தன. சட்டென்று ஒரு ஜன்னலில் என் பார்வை நிலை கொண்டது. இதழ்களில் அனிச்சையாக புன்னகை அரும்பியது. அன்றலர்ந்த மலர் போன்ற முகத்துடன் நார்த் இந்தியன் அல்லாத சவுத் இந்தியன் சாயலில் ஒரு பெண்ணின் முகம் தெரிந்தது.
எங்கோ பார்த்த ஒரு நியாபகமாக  இருக்கிறதே , எங்கே என்று தெரியவில்லை என்று யோசித்துக்கொண்டிருக்கும்போதே அந்தப் பேருந்து அவ்விடம் விட்டு கிளம்பிச் சென்றது.
                                                                        ( தொடரும்…)




No comments:

Post a Comment